களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார்

image

பூசைகளும் திருவிழாக்களும்

இந்த ஆலயத்தில் நடைபெறும் பூசைகள் திருவிழாக்களை பல்வேறு விதமாக பிரித்து நோக்கலாம்.

 

அ) நித்திய பூசைகள் -:

நாள் தோறும் பகற்பூசை நடைபெற்று வருகின்றது. வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கும் ஏனைய நாட்களில் பிற்பகல் 1.00 மணிக்கும் பூசைகள் ஆரம்பமாக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக அடியார்கள் பூசைக்குரிய பொருள்களையும் பொங்கலையும் நடாத்தி வருகின்றனர்.

ஆ) விசேட பூசைகள் -:

விசேட காரணங்களுக்காகவும் விசேட தினங்களுக்காகவும் இவை நடைபெறுகின்றன. இப் பூசைகளை மேலும் இரண்டு பிரிவாக நோக்கலாம்.

அ) தனிப்பட்டவர்களின் விசேட பூசை -:

தனிப்பட்ட நபர்கள் தமது ஆன்மீக ஈடேற்றத்திற்காக ஆலய நிருவாகத்தின் அனுமதியுடன் விசேட பொங்கற் பூசை உருத்திராபிஷேகம் ஸ்நபிநா அபிஷேகம் 108 சங்காபிஷேகம் 1008 சங்காபிஷேகம் என்பனவாயவற்றை நடாத்துகின்றனர்.

ஆ) குடும்பங்களின் விசேட பூசை -:

ஆலய நிருவாகத்தில் பங்கேற்றுள்ள ஆறு குடும்பங்களும் தத்தமக்கென சிறப்பானதும் விசேடமானதுமான பூசைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் பின்வரும் பூசைகள் குடும்ப ரீதியான பூசைகளாக நடைபெற்று வருகின்றன.

 

சித்திரை புது வருடப் பிறப்புப் பூசை -:

 

இது பெத்தாக் கிழவி குடும்பத்தினருக்குரியது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புதுவருடப் பிறப்பு நேரத்தில் பிள்ளையாருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் உற்சவ நேர்த்திகளுக்கும், கல்லடிப் பிள்ளையாருக்கும் மருத்து நீர் தேய்த்து அபிடேகம் செய்யப்பட்ட பின் புத்தாடை அணிவிக்கப்படுகின்றது. அதனை தொடர்ந்துவரும் பகலில் புதுவருடப் பிறப்புப் பூசை நடைபெறுகின்றது. அண்மைக் காலமாக இது 1008 சங்காபிஷேக பூசையாக நடைபெறுகின்றது. பூசை முடிவுற்றதும் கோவிலில் கைவிசேடம் வழங்கப்படுகிறது. கோவில் உண்டிலில் காணிக்கைப் பணமும் பிரசாதமும் ஒரு வெற்றிலை பாக்கு பழமும் வழங்கப்படுகின்றது. உள்ளுரவர்கள் மட்டும் அன்றி வெளியூர் வாசிகளும் இப்பூசையிலும் கைவிசேடத்திலும் கலந்து கொள்கின்றனர். பூசையின் போது எழுந்தருளிகளை வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து சாத்துப்படி மூலம் அலங்கரித்து உள் வீதியில் திருவுலா சுற்றுவர்.

2) மகா சிவராத்திரி பூசை -:
மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்தி பூசை பேனாய்ச்சி குடும்பத்தினருக்கு உரியது. இரவில் நான்கு சாமமும் நான்கு பூசைகள் நடை பெறுகின்றன. கல்லடிப் பிள்ளையாருக்கும் அபிஷேகம் நடைபெறும் சிவராத்திக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே சிவராத்திரி கும்பம் வைக்கப்பட்டு சிவராத்திரி அன்றிரவு விரதம் நோற்று கண் விழித்திருப்பர் எழுந்தருளிகளை வசந்த மண்டபத்தில் அலங்கரித்து வைத்து உள்வீதி திருவிழா சுற்றுவர் கண்விழிப்புக்காக கூட்டுப் பிரார்த்தனை கதாப் பிரசாங்கம் சமய சம்பந்தமான கலை நிகழ்ச்சிகளும் நடாத்துவர் அதிகாலையில் தீர்த்தக் கேணியில் கும்பம் சொரிந்து தீர்த்தம் ஆடுவர்.

3) திருவாதிரை பூசை -:
இது சுரக்காய் மூர்த்தி குடும்பத்தினருக்கு உரியது. திருவெம்பாவை ஆரம்பமானதும் சிவசக்திக்குரிய கும்பங்கள் வைக்கப்படும். மார்கழி மாதத்தில் இப்பூசை வருவதால் அதிகாலையில் திருவெம்பவை பாடி பூசை நடைபெறுகின்றது. கல்லடிப் பிள்ளையாருக்கும் நடைபெறுகின்றது. களுதாவளைக் கிராமத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் அடியார்கள் அதிகாலையில் கிராமத்தின் வீதிகள் தோறும் திருவெம்பவை பாடல்களைப் பாடி ஆலயத்தில் திருப்பள்ளி எழுச்சியுடன் திருவெம்பவையும் பாடுகின்றனர். திருவாதிரை நாள் அன்று எழுந்தருளிகளை வசந்த மண்டபத்தில் அலங்கரித்து அதிகாலையில் உள்வீதியில் திருவிழா சுற்றி பின்னர் திருப்பொற்சுண்ணம் இடித்து மூசிகம் எருது மயில் வாகனங்களில் சுவாமிகளை எழுந்தருளச் செய்து கிராம பிரதட்சணமாக சமுத்திர தீர்த்தம் ஆடச் செல்வர். கடற்கரையில் மிகப் பிரமாண்டமான முறையில் கஞ்சி வைத்து நீராகாரம் வழங்கப்படும். தீர்த்தம் ஆடிய பின் சுவாமிகள் கிராமப் பிரதட்சணமாக திருநீற்றுக் கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயம் சென்று அங்கு நடைபெறும் விசேட பூசையில் கலந்து கொண்டு பிரதான வீதி வழியாக ஆலயத்திற்கு வருவார். சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடச் செல்லும் போது திருவெம்பாவை பாடல்களை பாடிச் செல்வர். கடலில் தீர்த்தம் ஆடித் திரும்பி வரும் வழி எங்கும் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியின் முன்னால் காவடி, கரகாட்டம், கும்மி, கோலாட்டம், எல்லாம் ஆடி மகிழ்வர். கொம்புச் சந்தி அம்மன் ஆலயம் கல்லடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றிலும் சுவாமி இழைப்பாறிச் செல்வது வழக்கம் சுவாமி தூக்கி வரும் அடியவர்களுக்கும் ஆடிப்பாடி வரும் அன்பர்களுக்கும் கஞ்சி, தேநீர், கோப்பி, குளிர்பானம் என்பவற்றை பொதுமக்கள் கொடுத்து மகிழ்வர். சுவாமி செல்கின்ற பாதையில் பூரண கும்பங்களும் பலகாரம் நெற் பொரி, கடலை, அவல், முதலிய பிரசாதங்களும் வழங்கப்படுவதுண்டு. ஆலயத்தை மீண்டும் வந்தடைந்த சுவாமிகளை திருப் பொன்னூஞ்சல் பலகையில் அமர்த்தி பொன்னூஞ்சல் ஆட்டி மகிழ்வர். திருவாதிரை நாளன்று ஊர் எங்கும் கொண்டாட்டம் தான்.

4) கார்த்திகை பூசை -:
இது போற்றினாச்சி குடும்பத்தினருக்கு உரியது. முருகப்பெருமானுக்குரிய சர்வாலய தீப தினத்தற்று இப்பூசை நடைபெறுகிறது. கல்லடிப்பிள்ளையாருக்கும் அபிஷேகம் நடைபெறும். மாலை நேரம் ஆனதும் வீடுகள் தோறும் பலகாரம் சுட்டு வானவெடிக் கொழுத்தி விளக்கேற்றி கார்த்திகைக்காரனை கூவி அழைத்து மகிழ்வர். கார்த்திகைக்காரா. கார்த்திகைக்காரா உரலையும் உலக்கையும் கொண்டோடி வா என்று பெருத்த சத்தமாக கூவி அழைப்பார். வீடுகள் தோறும் கலகலப்பும் சிலுசிலுப்பும் பலகாரமும் தான் கோவிலின் வெளிவீதியில் மிக உயரமானதாக பனையோலை களப்பத்தோலை என்பவற்றால் சொக்கப்பனை ஒன்று உருவாக்குவர். அதில் வாழையும் கட்டி வைப்பார். வசந்த மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட எழுந்தருளிகளை உள்வீதி வெளி வீதியிலும் திருவிழா சுற்றுவர். சொக்கப்பனை தீ மூட்டி எரிப்பர் அது பெரியதோர் தீச்சுவாலையாக எரியும்.

5) தை பிறப்பு பூசை -:
இது செட்டி குடும்பத்தினருக்கு உரியது. புதுப் பானைகளில் பொங்கலிட்டு கதிரவனுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாள் இதுவாகும். கோவில் பகற்பூசையாக இது நடைபெறுகின்றது. வீடுகள் தோறும் அதிகாலையில் பொங்கிப்படைத்து உண்டு மகிழ்வர். கல்லடிப் பிள்ளையாருக்கும் நடைபெறும். வசந்த மண்டபத்தில் சுவாமிகளை அலங்கரித்து உள்வீதி திருவிழா சுற்றுவர்.

6) ஆவணி சதுர்த்திப் பூசை -:
இது வள்ளி நாயகி குடும்பத்தினருக்கு உரியது. விநாயகருக்கு உரிய விரதங்களில் ஆவணி சதுர்த்தி விரதமும் சிறப்பு வாய்ந்தது. முன்னிரவு நேரத்தில் பூசையும் திருவிழாவும் நடைபெறும். பிள்ளையாரின் விகட நடனத்தை பார்த்த சந்திரன் அகம்பாவம் கொண்டு விநாயகரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தமையால் சந்திரன் சாபம் பெற்றார். ஆவணி சதுர்த்திப் பிறையை பாரத்தால் கேடுகள் என்று கூறுவர். கஞ்சன் அம்மானையில் இடம் பெற்றுள்ள கரடியர் கோன் கதை இப்பூசையின் போது படிக்கப்படுகிறது. கல்லடிப் பிள்ளையாருக்கும் பூசை நடை பெறுகின்றுது.

குறிப்பு -: குடும்ப ரீதியான இப்பூசைகளுக்கு அவரவர் குடும்ப உறுப்பினர்களிடம் பணம் அறவிடுவது வழக்கம்.

 

7) பெருங்கதைப் பூசை -:
இது பெத்தாக் கிழவி குடும்பத்தினருக்கும் பேனாய்ச்சி குடும்பத்தினருக்கும் சம உரிமையானது. இரண்டு குடும்பத்தினரும் ஒன்றிணைந்து இப் பூசையை செய்கின்றர். விநாயகர் சட்டி விரதம் 21 நாட்கள் அனுட்டிக்கப்படுகின்றது. ஆலயத்தின் ஆரம்ப காலம் தொடக்கம் இவ்விரதம் அனுட்டிக்கப்படுதும் ஏடு படிக்கப்படுவதும் வழக்கம் ஆண்களும் பெண்களுமாக அநேகர் இவ்விரதத்தை கைக்கொள்கின்றனர். கையில் காப்புக் கட்டி விரதம் பிடிப்பவர்களும் உண்டு.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் கழிந்தபின் ரோகினி நட்சத்திரத்தில் ஆர்த்த கலிங்கத்து அணியிழையாள் காப்பணிந்து இவ்விரத்தை ஆரம்பிப்பர். இவ் விரதத்தின் போது மூல மூர்த்தி பரிவார மூர்த்திகள் எழுந்தருளிகள் வைரவர் பலிபீடம், மூசிகம் என்பவற்றுக்கும் காப்பு அணிவிக்கப்படும். சஷ்டி விரதத்திற்குரிய கும்பம் தானியக் குவியலின் மீது ஸ்தானம் செய்யப்படும். தம்ப மண்டபத்தின் உள்ளே இக் கும்பம் வைக்கப்படும். இவ்விடத்தில் விடே பூசையும் பிள்ளையார் கதை ஏட்டுக்குரிய மடையும் வைக்கப்படும். விரத காலங்களில் ஏடு படிக்கும் உரிமையுடன் கூடிய விரதாதி ஒருவர் பிள்ளையார் கதைப் பாடல்களை பக்தி சிரத்தையோடு இனிமையாகப் பாடுவார். விரதாதிகளும், ஏனையவர்களும் அமைதியாக அதனை செவிமடுப்பர். பாடல்கள் முடிவுறும் இடத்தில் நல்லதாம் என்ற வார்த்தையை உரிமையுடன் கூடிய விரதாதி ஒருவர் நீட்டி இழுத்து இசையோடு சொல்வார். சப்பாணி கொட்டாயே என்று பாடலில் வரும் போது அடியவர்கள் எல்லாம் சப்பாணி கொட்டுவர்.

சங்கற்பம் இருந்து தற்பையால் ஆன பௌத்திரம் அணிந்து விரதம் நோக்கும் அடியவர்கள் நாள் தோறும் விநாயகர் பெருமனுக்கு பிரியமான அறுகு வில்வம் வன்னி பலாசு ஆகிய பத்திர புஷ்பங்களை இட்டு வணங்குவர் 1ம் நாள், 3ம் நாள், 5ம் நாள், 7ம் நாள், என்று ஒற்றை நாட்களில் விரதாதிகளுக்கு சங்கற்பம் வைக்கப்படும். ஒரு வேளை உணவுண்டு இவ் விரதம் அனுடிட்டிப்பர். 21 நாள் பூசையில் 10 நாள் பூசைகளை பெத்தாக் கிழவி குடும்பத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களும் 10 நாள் பூசைகளாக பேனாய்ச்சி குடும்பத்தினர் தனிப்பட்ட உறுப்பினர்களும் செய்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் இந்த இரண்டு குடும்பத்தினரிடமும் பணம் அறவிட்டு இறுதி நாள் பூசையையும் தீர்த்தத்தையும் சிறப்பாக செய்கின்றளர். இவ் விரதம் அனுட்டிப்பவர்களிடம் ஆலய நிருவாகம் பணம் அறவிடுகின்றது. இறுதி நாள் அன்று முழுமையாக உபவாசம் இருப்பதுடன் அன்றிரவு நித்திரை விழிப்புக்காக கூட்டுப் பிராத்தனை சமய சொற்பழிவு கதாப் பிரசாங்கம் கலை நிகழ்ச்சிகள் சமய சம்பந்தமான வினாவிடை போட்டிகள் என்பனவும் நடைபெறுகின்றன.

கடைசி நாள் அன்றிரவு வசந்த மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி இருப்பர். விசேட பூசைகளும் உள்வீதியில் திருவிழாவும் நடைபெறும் காலையில் மாணிக்க வாசக சுவாமிகளின் திருப் பொற்சுண்ணம் பாடி சுண்ணம் இடிக்கப்பட்டும். மூல மூர்த்தி தொடக்கம் அடியவர்கள் வரையில் அனைவரது காப்புகளும் அறுக்கப்படும். ஏடு படிப்பவர் விநாயகர் கும்பத்தை தூக்க நல்லதாம் சொன்னவர் அறுக்கப்பட்ட காப்புகளின் தாம்பாழத்தை தூக்கிக் கொள்வார். தீர்த்தக் கேணியில் தீர்த்தம் ஆடுவதற்கு சுவாமிகள் எழுந்தருளுவர் தானியங்கள் முளைத்து வளந்திருப்பதால் முளைப்பாலிகைகளாக காட்சி தரும். விரதம் பிடித்த அடியவர்களும் தங்கள் வீடுகளிலே முளைப்பாலிகை கும்பம் ஒன்று வைப்பது வழக்கம். மாலை வேளையில் அக்கும்பத்திற்கு விளக்கேற்றி வைத்து விநாயகர் வழிபாடு செய்து அவ்விடத்திலேயே அவர்கள் இலை போட்டு உண்பது வழக்கம். தீர்த்தம் ஆடவரும் போது வீடுகளில் வைக்கப்பட்ட முளைப் பாலிகையையும் அவர்கள் எடுத்து வருவர் இழைப்பாறும் மண்டபத்திலே கிரியைகள் நடைபெற்ற பின்னர் தீர்த்தக் கேணியில் சுவாமிக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று தீர்த்தம் ஆடுவர் அப்போது ஆலயத்துள் வைக்கப்பட்ட முளைப் பாலிகை கும்பமும் அறுக்கப்பட்ட காப்புகளும் அடியார்கள் கொண்டுவந்த முளைப்பாலிகைகளும் தீர்த்தக் கேணியில் விடப்படும். அவை நீரில் மிதந்து நீந்திச் செல்வது தனியானதோர் அழகு. கும்பம் வைத்த குடத்தையும் காப்பிருந்த தழிசையையும் எடுத்து வருவர்.

தீர்த்தம் ஆடிய பின் சுவாமிகள் தீர்த்தக் கேணியையும் ஆலய வெளி வீதியையும் சுற்றி வந்து திருப் பொன்னூஞ்சல் பலகையிலே அமந்திருப்பர். ஆலய பிரதம குருவும் ஏனைய குருமாரும் பணியாளர்களும் விரதாதிகளும் நிருவாகிகளும் அடியார்களும் தீர்த்தம் ஆடிய ஆடைகளை மாற்றி உலர்ந்த ஆடைகள் அணிந்து ஆலயத்துள் ஆண்டவன் முன்னால் பிரசன்னம் ஆவர். சிவனுக்கும், பிள்ளையாருக்கும், முருகனுக்குமான பொன்னூஞ்சல் பாடல்கள் பாடப்படும். சுவாமிகளை ஊஞ்சல் ஆட்டவும் அவர்களுக்கு சாமரை வீசவும் இளம் பெண்கள் தயாராக நிற்பர். திருஊஞ்சல் முடிவுற்றதும் உரிய முறைப்படி பிரசாதம் வழங்கப்படும். சுவாமிகளை வசந்த மண்டபத்தில் அமர்த்திய பின் தீர்த்தம் ஆலய மூல மூர்த்தியின் பிரதி நிதியாகிய பிள்ளையாரை தீர்த்தக் கலசத்துடன் பிரதம குரு மூடிய பட்டுப் போர்வையுள் மூலஸ்த்தானத்திற்கு எடுத்துச் செல்வார். பின்னர் பூசை நடைபெறும். அதனை தொடர்ந்து பாத காணிக்கை பிடித்தலும் பத்திர காசு அறவிடுதலும் உதவிய குருக்களுக்கும் அவரது உதவியாளரான ஐயருக்கும் விரதாதிகள் அவர்களின் பாதங்களை வணங்கி பாதகாணிக்கை செலுத்துவர். சங்கற்ப தினத்தன்று தமக்கு அணிவிக்கப்பட்ட தற்பை புல்லிலால் ஆன பௌத்திரத்தையும் கழட்டிக் கொடுப்பர். பாதகாணிக்கைப் பணம் அவர்களுக்கே சொந்தமாகும். 21 நாளும் பத்திரம் போடுவதற்குரிய பத்திரங்களை சேகரித்து கொடுத்தமைக்கான பணம் பத்திரக் காசு எனப்படும். விரதாதிகளிடம் இருந்து அறவிடப்படும். இப்பணத்தை பின்வரும் முறையில் பிரித்து வழங்குவதே சம்பிரதாய நடை முறையாகும். பத்திரக் காசை இரண்டாகப் பிரித்து ஒரு பங்கு பிரதம குருவுக்குரியது. மீதியை இரண்டாகப் பிரித்து ஒரு பங்கு ஐயருக்கு உரியது. முற்காலத்தில் இரண்டு காவல்கார்கள் இருந்த காரணத்தால் மீதியை இரண்டாகப் பிர்த்து இருவருக்கும் சமமாக கொடுத்தனர். இன்னும் சிலர் சேவையில் இருப்பதால் மீதியை முன்றாக பிரித்து இரண்டு காவல்காரர்களுக்கும் இரண்டு பங்கினை கொடுத்த பின் ஒரு பங்கினை எடுத்து வெளிக் காவல்காரர் உதவி செய்தவர் என்போருக்கு பங்கிடுகின்றனர். அப்படி பங்கிடும் போது அத்தொகை போதுமானதாக இல்லை என நிருவாகம் கருதினால் ஆலயத்தின் பணத்திலும் சிறிதோர் தொகையை சேர்த்து கொடுப்பதுண்டு.

 

8) கும்பாபிஷேக நினைவு தின அபிசேக பூசை -:
இறுதியாக நடைபெற்ற புனர் ஆவர்த்தன மகாகும்பாபிஷேகம். ------------ ஆண்டு வைகாசி மாதம் --------- நட்சத்திரத்தில் நடைபெற்றது. இத்தினத்தை நினைவு கூறும் வகையில் வருடம் தோறும் வைகாசி -------------------------------------நட்சத்திரத்தில் 1008 சங்குகளால் ஆன அபிடேக பூசை நடைபெறுகின்றது. இது ஆலய நிருவாகத்தினரின் பொறுப்பில் பொதுவான பூசையாக நடைபெகின்றது.

9) கேதார கௌரி விரதம் -:
புரட்டாதி மாதம் பூர்வ பக்க தசமி திதி தொடக்கம் அபர பக்க ஐப்பசி மாத அமாவாசை திதி வரை கேதார கௌரி விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. உமாதேவி, சிவபெருமானுடைய உடலில் சரி பாதி உடலைப் பெறுவதற்கு இவ்விரதம் உதவியது. அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விரதம் இன்று பிரசித்தி பெற்ற விரதமாக விளங்குகின்றது. பல நூற்றுக் கணக்கானோர் இங்கு இவ்விரதத்தைத் கைக் கொள்கின்றனர். கௌரிக் காப்பு வழங்கப்படுகின்றது. இதற்குரிய கட்டணம் அறவிடப்படுகின்றது. ஆலய நிருவாகத்தின் பொதுவான பூசையாக இது அமைந்துள்ளது விரதாதிகள் நாள் தோறும் பத்திரம் போடுவர். இவ் விரதத்திற்கும் தம்ப மண்டபத்தினுள் கும்பம் வைக்கப்படுகின்றது. சங்கற்பம் இருத்தம் பௌத்திரம் அணிதல் பத்திரம் போடுதல் பாதகாணிக்கை பிடித்தல் என்பவைகளும் நடைபெறுகின்றன. கேதார கௌரி விரத மகிமை பற்றியும் சமய தத்துவங்கள் பற்றியும் விளக்கமான படிப்புகள் விரத காலத்தில் நடை பெறுகின்றன. 2002ம் ஆண்டு தொடக்கம் கேதார கௌரி விரத ஏடு 21 நாளும் படிப்பதற்கு ஆரம்பித்துள்ளனர்.

 

10) சனிஸ்வர ஹோமம் -:
புரட்டாதி மாதம் எள்ளெரித்து சனிஸ்வரனுக்கு விசேட ஹோமம் நடைபெறுகின்றது. இதுவும் ஆலய நிருவாகத்தின் பொதுப் பூசையாக நடைபெறுகிறது.

 

11) கல்லடிப் பிள்ளையார் அபிசேகம் -:
பிரதான பாதை அருகில் இருக்கும் கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் விசேட அபிடேகம் நடைபெறுகிறது. வருடா வருடம் நடைபெறும் இந்த அபிசேகம் ஆலய நிருவாகத்தின் பொதுவான பூசையாக நடைபெறுகின்றது.

12) வருடாந்த அலங்கார உற்சவ தீர்த்தம், திருவிழா, பூசைகள் -:
களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் 1956 ம் ஆண்டு திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. இனக்கலவரம் காரணமாக கதிர்காமம் சென்று தீர்த்தம் ஆடுவதில் சிரமம் ஏற்பட்ட போது அதற்குப் பிரதியீடாக இங்கு திருவிழாவும் தீர்த்தமும் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் திருவிழாவுக்கு வேண்டிய வாகனங்கள் கொடி, குடை முதலானவை ஏனைய ஆலயங்களிடம் இருந்து இரவல் பெறப்பட்டன. தீர்த்தம் ஆடும் தினமும் கதிர்காம தீர்த்த தினத்திலும் வைக்கப்பட்டு இருந்தது. பன்குளம், பெரியகுளம் மட்டக்களப்பு வாவி என்பனவற்றில் தீர்த்தம் ஆடப்பட்டதும் உண்டு. குளத்தில் நீர் வற்றிப் போனமையால் ஆற்றில் ஆடினர் திருவிழா தொடங்கப்பட்ட போது குடும்ப ரீதியாக இல்லாமல் ஊரவர்கள் எல்லோரிடமும் வரி அறவிடப்பட்டு பொதுவான திருவிழாக்களாக நடைபெற்றன. படிப்படியாக திருவிழாவிற்கு வேண்டிய திருப்பணிச் சாமான்கள் ஆலயத்திற்கு சொந்தமாக பெறப்பட்டன. திரு விழாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. திரு விழாக்களை குடும்ப ரீதியாக செய்வதனால் சிறப்பாகவும் கரிசனையோடும். செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். எனக் கருதிமையால் அவ்வாறு செய்ய தீர்மானித்தனர் 10 நாள்கள் திருவிழா என முடிவாகிற்று முதலாம் நாள் 2ம் நாள் திருவிழாக்கள் ஆலய நிர்வாகத்தின் செலவில் பொதுத் திருவிழாக்களாக நடை பெறுகின்றன. ஆரம்ப காலத்தில் 1ம் நாள் திருவிழா கோவில் செலவில் பிள்ளையாரின் திருவிழாவாக நடைபெற்றது. உண்டு. திருவிழா ஆரம்பத்த காலத்தில் திருவிழா பொதுக் கூட்டம் நடை பெற்றபோது 3ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரையுள்ள ஆறு திருவிழாக்களும் திருவுளச் சீட்டுபோடப்பட்டதும் உண்டு. ஆறு குடும்பங்களின் சார்பில் திருவுளச் சீட்டுக்களை எடுப்போர் அதில் குறிக்கப்பட்டுள்ள திருவிழாக்களை தமது குடும்பத்தின் தனிப்பட்ட திருவிழாவாக செய்து வந்தனர். தமது குடும்ப உறுப்பினர்களிடம் திருவிழாவுக்கு வரிப் பணத்தை அறவிட்டு திருவிழாக்களை போட்டி போட்டுக் கொண்டு சிறப்புறச் செய்தனர். 9ம் நாள் திருவிழா ஆறு குடும்பத்தினரும் சம பங்கிட்டு பொதுத் திருவிழாவாக வெகு சிறப்பாகச் செய்வர். வெளியூர் அடியவர்களும் இத்திருவிழாவைக்காண பெருந்தொகையாக வந்துசேர்வர் 10ம் நாள் தீர்த்தமும் ஆறு குடும்பத்தினரின் பொது உடமையாக நடை பெறுகின்றது. இப்பொழுது ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறத்தக்க வகையில் அதற்கு 10 நாள் முன்பாக திருவிழா ஆரம்பமாகின்றது. இத்திருவிழா அலங்கார உற்சவம் என்று அழைக்கப்படுகின்றது. திருவிழாவும் அதனோடு சேர்ந்த பூசைகளும் குடும்ப ரீதியாக தனிப்பட்டவைகளாக சில இருப்பதையும் ஆலய நிருவாகப் பொறுப்பாக சில இருப்பதையும் ஆறு குடும்பங்களின் நிருவாகப் பொறுப்பாக சில இருப்பதையும் அவதானிக்கலாம்.

 

ஆலய அமைப்பு பற்றி அறிவதற்கு

 

 

புதியவை இங்கே...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

விளக்கமாக விரைவில்

image

விளக்கமாக விரைவில்

Read more...

 

 

 
 
  Domain Name + 1GB Linux India Web Hosting in Rs.349