கல்வி அபிவிருத்தி நிதியம்

இந்த வரைபினை இறுதி செய்வதற்கு தங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. 
களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழு – வழிகாட்டி வரைபு
 

அறிமுகம்

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய யாப்பின் உபவிதிகள் 3:3, 3.4 மற்றும் 4:3என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைதற்பொருட்டு 29/12/2013 ஆம் திகதி நடைபெற்ற ஆலய பொதுக்கூட்டத்தில் பொதுச்சபையின் அனுமதியுடன் கல்வி அபிவிருத்தி நிதியம் உருவாக்கப்பட்டது.

மேற்படி நிதியம் தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரால் கூட்டப்பட்ட 27/07/2014  திகதிய விசேட கலந்துரையாடலில்கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழுவின் (Advisory Committee) செயற்பாட்டு எல்லை (Functioning limitations) தொடர்பில் உத்தேச வரைபொன்றினை (Proposed Draft) உருவாக்கும் நோக்கில் அக்கலந்துரையாடலில் அன்றைய தினத்தில் தெரிவுசெய்யப்பட்ட விசேட குழு உறுப்பினர்களால், மேற்கூறப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களையும் ஆலய பரிபாலனசபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் கவனத்தில்கொண்டு இவ்வரைபு உருவாக்கப்பட்டது. இவ்வரைபில் உறுப்புரை 3 இல் குறிப்பிடப்படும் ஆலோசனைக் குழுவினை செம்மையான முறையில் வழிநடாத்துவதற்கான வழிகாட்டியாக இவ்வரைபு பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வழிகாட்டி வரைபு 09/09/2014 திகதியில் நடாத்தப்பட்ட களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பொதுச்சபைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு சபையோரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உறுப்புரை 1
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி நிதியம்
களுதாவளைப் பிள்ளையார் ஆலய 29/12/2013திகதிய பொதுக்கூட்டத் தீர்மானத்துக்கிணங்க ஆலய பரிபாலன சபையினால் உருவாக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கு களுதாவளை பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி நிதியம் என அழைக்கப்படுகின்றது.

அத்துடன் அந்நிதியத்தின் பௌதீக செயற்படு அங்கமாக உள்ள நிதியத்தை கையாளும் அமைப்பான ஆலய பரிபாலன சபையையோ அல்லது பரிபாலன சபை அதன் சட்ட திட்டங்களுக்கு அமைய முன்மொழியும் அமைப்பையோ இனிவரும் சரத்துக்களில் நிதியம் எனக்குறிப்பிடப்படும் சொல் சுட்டிநிற்கும்.

1.1. கல்வி அபிவிருத்தி நிதியத்தின் நோக்கம்
இக் கல்வி அபிவிருத்தி நிதியத்தின் நோக்கமானது இலக்குப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கான நிதி உள்ளீட்டினை வளங்குவதாக அமையும். பொதுக்கல்வி, உயர்கல்வி, தொழிநுட்பக் கல்வி,தொழிற்கல்வி மற்றும் தனிமனித ஆளுமை விருத்திக்கான கல்விச்செயற்பாடுகள் போன்றவற்றில் விருத்தியை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி செய்வதற்காக இது நிறுவப்பட்டுள்ளது.

1.1.1.பொதுக்கல்வி
அ. முன்பள்ளிக்கல்வி
நவீன கல்விச்சிந்தனைகளின் அடிப்படையில் முன்பள்ளிகளின் சூழல், பாடப்பரப்பு, கற்பித்தல் முறைமை என்பவற்றை விருத்திசெய்தல். சிறார்களின் உளவிருத்தி, திறன்விருத்தி மற்றும் சந்தோசமான பாடசாலைச் சூழல் என்பவற்றை உருவாக்குதல்.

ஆ.ஆரம்பக்கல்வி
ஆரம்பப் பிரிவில் எழுத்தறிவு, எண்கணித அறிவு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதோடு மாணவர்களின் ஏனைய திறன்களான பேச்சாற்றல்,எழுத்தாற்றல், படைப்புத்திறன் (Creativity), அளிக்கை செய்யும் ஆற்றல் (Presenting Skill), குழுவாக இயங்குதல், மொழி விருத்தி, கணணியறிவு போன்றவற்றை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல். இதனூடாக ஆரம்பப் பிரிவில் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையினைக் குறைப்பதுடன் கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்தல் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை அடைவு மட்டத்தினை அதிகரித்தல்.

இ. இடைநிலைக்கல்வி
க.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவர்;களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்காக ஆறாம் தரத்தில் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் ICT போன்ற பாடங்களில் கூடுதலான கவனம் செலுத்தி அடைவு மட்டத்தினை அதிகரித்தல்;. மாணவர்கள் தங்களது திறன்களை விருத்தி செய்வதற்கான இணைப்பாடவிதான செயற்பாடுகளை விரிவுபடுத்துதல்.

ஈ. உயர்தரம்
உயர்தர மாணவர்களைத் துறைரீதியாகப்பொருத்தமான தெரிவுகளை மேற்கொள்வதற்காக திசைமுகப்படுத்தல் (Orientation). விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், வர்த்தகம், மற்றும் கலை ஆகிய துறைகளில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல். ஆங்கில மொழி விருத்தி மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அறிவு விருத்தியை ஏற்படுத்தல்.

1.1.2. உயர்கல்வி
பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு நிதியுவி வழங்கல். பட்டப் பின் கல்விச் செயற்பாடுகளில் (Master, MPhil, PhD) ஈடுபடுவதற்கு நிதியுதவி வழங்கல். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள், துறைகளைத் தெரிதல், அடைவுகளை அதிகரித்தல் என்பவற்றுக்கு உதவுதல். ஆய்வுகளுக்கு நிதி மற்றும் தொழிநுட்ப உள்ளீடுகள் வழங்கல்.

1.1.3. தொழிநுட்பக்கல்வி
பாடசாலைக் கல்விச் செயற்பாட்டை இடைநிறுத்திய அல்லது பாடசாலைக் கல்வி முடிவுற்று உயர்கல்வியை தொடரமுடியாதுள்ள மாணவர்களை NVQ போன்ற முறையான (Formal) தொழிநுட்பக் கல்விச் செயற்பாடுகளுக்கு வழிப்படுத்துதல்.

1.1.4. தொழிற்கல்வி
நவீன தொழிற்சந்தைக்கு ஏற்ற வகையில் திறன்களை விருத்திசெய்தல். பொருத்தமான முறையான தொழிற்கல்விச் செயற்பாடுகளுக்கு ஆற்றுப்படுத்துதல். அரச சேவைகளுக்கான ஆட்சேர்ப்புப் போட்டிப்பரீட்சைகளை வெற்றிகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டல்.

1.1.5. தனிமனித ஆளுமை விருத்திச் செயற்பாடுகள்
மொழி அறிவு, தொடர்பாடல் மற்றும் தனிமனித விருத்திச்(Inter personal development)  செயற்பாடுகளுக்கு நிதிவழங்கல்;.

1.2 நிதியத்தின் நிதிப்பங்கீடு
ஆலய பரிபாலன சபையினரால் ஆலயத்தின் வருமானத்தில் 5மூஆன தொகை நிதியத்துக்காக ஒதுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்பட்டு அந்நிதி நிதியத்தின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வாராந்தம் அல்லது மாதாந்தம் வைப்புச்செய்யப்படவேண்டும். அந்நிதி கீழ்வரும் வீதங்களில் நிதியாண்டு ஒன்றின் முடிவில் பகிர்ந்து செலவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.

fundreleasepercentage
தேவையேற்படின் விசேட நிதி ஒதுக்கீடுகள் செய்யும் அதிகாரம் ஆலய பரிபாலன சபைக்கு உண்டு. அதற்கான குறை நிரப்பு வேண்டுகோளை ஆலோசனைக்குழு சமர்ப்பிக்கவேண்டும்.

1.3 நிதியைக் கையாளல்
நிதியைக்கையாள்வதற்கான அதிகாரம் ஆலய பரிபாலன சபைக்கே உண்டு. ஆலய யாப்பின் உறுப்புரை 11.0 இன் பிரிவுகளுக்கு அமைய நிதி நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இந்நிதியத்துக்காக அரச வங்கியொன்றில் தனியான நிலையான வைப்புக் கணக்கு அல்லது நம்பிக்கை பொறுப்பு நிதியக்கணக்கு ஒன்று பரிபாலன சபையால் பேணப்படவேண்டும். நிதியத்தில் நோக்கங்களுக்காக ஆலயத்தால் பங்களிக்கப்படும் மற்றும் வெளியில் இருந்து பெறப்படும் பணத்தினை இக்கணக்கில் இடலாம்.

இக்கணக்கை நடைமுறைப்படுத்துவதன்பேரில் பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் ஒப்பமிட்டு மீளப்பெறுதலை மேற்கொள்ளலாம்

கல்வி அபிவிருத்திக்கு தேவையான நேரடியான நிதி உள்ளீடுகளை வழங்கும் நோக்கில் மாத்திரமே இந்நிதியம் அமைக்கபட்டிருப்பதால் பாராட்டுதல் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன தவிர்க்கப்படவேண்டும். பாராட்டுதல்கள் பரிசில் வழங்கல் என்பவற்றுக்கான அவசியம் ஏற்படின் அதை ஆலய யாப்பின் அடிப்படையில் நேரடியாக ஆலய நிருவாகமே முன்னெடுக்கும். வங்கிக்கணக்கின் நிலுவை, வைப்பிலிடல் மற்றும் நிதிப்பரிமாற்றம் தொடர்பான அறிக்கைகளை பார்வையிடும் உரிமை இதன்பின்னால் உறுப்புரை 3 இல் குறிப்பிடப்படும் ஆலோசனைக் குழுவுக்கு உண்டு

1.4 நிதியத்தின் அலுவலக முகவரி
தமிழில்:-
கல்வி அபிவிருத்தி நிதியம்,
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்,
களுதாவளை,
மட்டக்களப்பு

ஆங்கிலத்தில்:-

EDUCATION DEVELOPMENT TRUST,

KALUTHAVALAI SUYAMBULINGA PILLAYAR ALAYAM,

KALUTHAVALAI

BATTICALOA.  என்பதாக அமையும்

இணையத்தளம்:———————————————–
மின்னஞ்சல் முகவரி:————————————— என்பதாக அமையும்.

1.5 கடிதத் தலைப்பு
யு4 அளவுத் தாளில் மேலிருந்து கீழாக முதலில் பிள்ளையார் சுழியும் அதன்கீழ் தமிழில் வாமினி- நிலைக்குத்தான எழுத்துருவில் 25 எழுத்துருஅளவிலும், காவி வர்ணத்திலும்
கல்வி அபிவிருத்தி நிதியம்,
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் என அச்சிடப்படவேண்டும்

இரண்டாவதாக ஆங்கிலத்தில் Times New Roman நிலைக்குத்தான எழுத்துருவில் முழுவதும் பெரிய எழுத்தில் (Capital letters)  25 எழுத்து அளவிலும்,காவி வர்ணத்திலும்

EDUCATION DEVELOPMENT TRUST

KALUTHAVALAI  SUYAMBU LINGA PILLAYAR ALAYAM  என அச்சிடப்படவேண்டும். தேவையேற்படின் சிங்கள மொழியில் இதே அளவுப்பிரமாணத்தில் பொருத்தமான அலுவலகப் பாவனை எழுத்துருவில் (Official font)  அமைத்துக்கொள்ளலாம்.

நிதியத்திற்கென்று தனியே இலச்சினை எதுவும் வடிவமைக்கவேண்டிய அவசியமில்லை கடிதத்தலைப்பில் வலது பக்க மூலையில் பிள்ளையார் படம் பொறிக்கப்படும்.அலுவலக முகவரி கடிதத்தலைப்பின் அடிப்பகுதியில் உறுப்புரை 1.3 உள்ளபடி அச்சிடப்படும்.

உறுப்புரை 2
ஆலய பரிபாலன சபையின் பங்குகளும் அதிகாரங்களும்
கல்வி அபிவிருத்தி நிதியத்தினை கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் ஆலய பரிபாலன சபைக்கு உரித்தானதாகும். கல்வி அபிவிருத்திக்காக, கல்வி அபிவிருத்தி நிதியத்திலிருந்து ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை வரையறைசெய்யும் அதிகாரம், கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் செயற்திட்டங்களுக்கான நிதி வழங்குவதற்கான அனுமதி வழங்குதல் மற்றும் நிதி வழங்குதல் என்பன ஆலய நிருவாக சபையால் மேற்கொள்ளப்படும்.

கல்வி அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்படும் உத்சே செலவு அறிக்கை,திட்ட வரைபுகள் சார்பாக தெளிவின்மைகள் காணப்படுமிடத்து அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படுமிடத்து அல்லது செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் அல்லது விளக்கங்கள் ஆலய நிருவாக சபைக்குத் தேவைப்படுமிடத்து நேரடி விளக்கங்களாகவோ அல்லது அறிக்கைகளாகவோ ஆலோசனைக் குழுவிடம் கோரமுடியும்.

நடைமுறையில் உள்ள செயற்றிட்டங்களில் முறைகேடுகள் அல்லது துஸ்பிரயோகங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழுவால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அல்லது சுயாதீனமாக ஆலய பரிபாலன சபை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அத்திட்டத்தை இடைநிறுத்தும் அதிகாரம் ஆலய பரிபாலன சபைக்கு உண்டு. முறைகேடுகள் அல்லது துஸ்பிரயோகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும், இழப்பீட்டுத் தொகை கோரும் அதிகாரமும் பரிபாலன சபைக்கு உண்டு.

2.1 பொதுச்சபைக்கு விளக்கமளித்தல்
நிதியத்தை கையாள்பவர்கள் என்ற வகையில்ஆலய பொதுச்சபைக்கு கல்வி நிதியத்தின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கும்; பொறுப்பு ஆலய பரிபாலன சபைக்கே உண்டு.

உறுப்புரை 3
கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழு
களுதாவளை பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் கல்விசார் திட்டம் அல்லது திட்டங்களுக்கு திட்டமுகாமைத்துவ (Project Management) இ நிபுணத்துவ ஆலோசனைகளையும் (Technical Advice) நிதியளித்தல் தொடர்பான சிபாரிசுகளையும் களுதாவளை பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கு மேற்கொள்வதற்காக அமைக்கப்படும் நிபுணர்குழு கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக்குழு (Advisory committee) என அழைக்கப்படும். இதன்பின்னர் இது ஆலோசனைக்குழு அல்லது குழு எனக்குறிப்பிடப்படும்.

3.1 ஆலோசனைக் குழுவின் அலுவலக முகவரி
தமிழில்:-
கல்வி ஆலோசனைக்குழு,
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்,
களுதாவளை,
மட்டக்களப்பு.

ஆங்கிலத்தில்:-

EDUCATIONAL ADVISORY COMMITTEE,

KALUTHAVALAI SUYAMBULINGA PILLAYAR ALAYAM,

KALUTHAVALAI

BATTICALOA  என்பதாக அமையும்.

மின்னஞ்சல் முகவரி:———————— என்பதாக அமையும்.

3.2 கடிதத் தலைப்பு
A4 அளவுத் தாளில் மேலிருந்து கீழாக முதலில் பிள்ளையார் சுழியும் அதன்கீழ் தமிழில் வாமினி நிலைக்குத்தான எழுத்துருவில் 25 எழுத்து அளவிலும்,காவி வர்ணத்திலும்
கல்வி ஆலோசனைக்குழு
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் என அச்சிடப்படவேண்டும்

இரண்டாவதாக ஆங்கிலத்தில் Times New Roman நிலைக்குத்தான எழுத்துருவில் முழுவதும் பெரிய எழுத்தில் (Capital letters) 25 எழுத்து அளவிலும்,காவி வர்ணத்திலும்

EDUCATIONAL ADVISORY COMMITTEE

KALUTHAVALAI SUYAMBULINGA PILLAYAR ALAYAM என அச்சிடப்படவேண்டும். தேவையேற்படின் சிங்களத்தில் இதே அளவுப்பிரமாணத்தில் பொருத்தமான அலுவலகப் பாவனை எழுத்துருவில் (Official font)  அமைத்துக்கொள்ளலாம்.

ஆலோசனைக் குழுவுக்கென்று தனியே இலச்சினை எதுவும் வடிவமைக்கவேண்டிய அவசியமில்லை கடிதத்தலைப்பில் வலது பக்க மூலையில் பிள்ளையார் படம் பொறிக்கப்படும். அலுவலக முகவரி கடிதத்தலைப்பின் அடிப்பகுதியில் உறுப்புரை 3.1 உள்ளபடி அச்சிடப்படும்.

உறுப்புரை 4
குழுவின் பங்குகளும் கடமைகளும்
4.1ஆய்வுகள் மேற்கொள்ளல்
எமது கிராமத்தின், பிரதேசத்தின் கல்வி விருத்தியில் காணப்படும் சவால்களையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றை வினைத்திறனான முறையில் வெற்றிகொள்வதற்காக செயற்றிட்டங்களை வகுப்பதற்குத் தேவையான அடிப்படை ஆய்வுகளை(Base-line survey) மேற்கொள்ளல்.

இக்குழுவானது, ஆய்வுகளுக்காக முதல்நிலை (Primary data) மற்றும் இரண்டாம் நிலைத் (Secondary data)  தரவுகளைத் திரட்டவும்;, பேணுவும், ஆவணப்படுத்தவும், தேவையேற்படின் வெளியிடவும் முடியும்.

இக்குழு மேற்கொள்ளும் ஆய்வுகளின் நோக்கமாக முன்பள்ளி நடவடிக்கைகளின் தரத்தையும் வெளியீடுகளையும் மேம்படுத்தல், தேசியப் பரீட்சைகளில் பாடசாலைக் கல்வி அடைவ மட்டத்தை அதிகரித்தல், ஏனைய உயர் கல்வி, தொழிற்கல்வி மற்றும் தொழிநுட்பக் கல்வி உள்வாங்கல்களில் எமது கிராம மற்றும் பிரதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் அமையும். தனிமனித திறன்விருத்தி சார்பாக (Inter-personal development), கல்வி அபிவிருத்திக்குத் தேவையான பௌதிக வளங்களை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுகளாகவும் இவ்வாய்வுகள் அமையலாம்.

கல்விஅபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான செயற்றிட்டங்களை வடிவமைப்பதற்கும் அவற்றின் சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்குமான சாத்தியப்பாட்டு ஆய்வுகளையும் (Feasibility studies)  இக்குழுமேற்கொள்ளும்.

4.2 தந்திரோபாய திட்டங்களை (Strategic plan) வகுத்தல்
இக்குழுவானது எதிர்கால கல்வித்தேவைகள், இன்றைய சவால்கள் மற்றும் சமூகக் கடப்பாடுகள் என்பவற்றை கருத்திற்கொண்டு நீண்ட கால மற்றும் குறுங்கால தந்திரோபாய திட்டங்களை வடிவமைக்கவேண்டும். தந்திரோபாய திட்டங்களின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்கள் அமைந்திருப்பதை இக்குழு உறுதிப்படுத்தவேண்டும்.

4.3திட்டங்களை வடிவமைத்தல்
கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டிய அல்லது பரிந்துரைக்கப்படவேண்டிய கல்வி அபிவிருத்தி தொடர்பான எண்ணக்கருக்களை (Concept papers) முறையான செயற்றிட்டங்களாக எழுத்துருவாக வடிவமைத்தல் மற்றும் முன்னகர்த்தல். ஆலய நிதியத்திற்கு வெளியே நிதி திரட்டப்படும்போது அந்நிதி நிதி வழங்குனரின் கரிசனை நிதியத்தின் இலக்கு என்பவற்றுக்கு பரஸ்பர புரிந்துணர்வுடன், தர்க்க ரீதியான தொடர்புடன் செலவு மற்றும் செயற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆலோசனைக்குழு உறுதிப்படுத்தவேண்டும்.

4.4திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அனுமதிபெறல்
வடிவமைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கு தெளிவுறுத்திநிதியத்தின்எழுத்துமூலஅனுமதியைப் பெறுவது இக்குழுவின் கடமையாகும்.
4.5 திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அலகுகளை (Implementing Body) உருவாக்கல்
ஆலய நிதியத்தினால் அனுமதியளிக்கப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான செயற்பாட்டு; குழுக்களை உருவாக்க அல்லது பரிந்துரை செய்ய இக்குழுவால் முடியும்.

4.6 உத்தேச செலவு அறிக்கை சமர்பித்தல்
வருடாந்த உத்தேச செலவு அறிக்கையினை டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆலய பரிபாலன சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

4.7 கல்விச் செயற்பாடுகளுக்கு நிதிகோரும் அமைப்புகளுக்குஉதவுதல்
கல்வி விருத்திக்காகச் செயற்படும் அமைப்புக்கள் தங்களது செயற்றிட்டங்களுக்கு ஆலயத்தின் கல்வி அபிவிருத்தி நிதியத்திலிருந்து நிதியுதவிகோருமிடத்து, அவர்களது கோரிக்கைகளை முறையான செயற்றிட்ட வரைபுகளாக (Project proposals)  எழுத்துருவில் பெற்றுக்கொண்டு நிதியத்திற்கு முன்னகர்த்தல்.

குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் சாத்தியப்பாடுகளை ஆராய்தல் அத்துடன் திட்டங்களை மேம்படுத்த திருத்தங்கள் அவசியப்படின் நிதிகோரும் அமைப்புடன் கலந்துரையாடி செவ்வைகளை (Corrections)  மேற்கொண்டு ஆலய கல்வி அபிவிருத்தி நிதியத்தின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்குப் பரிந்துரைசெய்தல்.

4.8 கண்காணிப்பும் மீளாய்வும்
கல்வி அபிவிருத்தி நிதியத்திலிருந்து நிதியளிக்கப்படுகின்ற மற்றும் குழுவால் மேம்படுத்தல் ஆலோசனை வழங்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் கண்காணிப்பதற்கும் (Monitoring) மதிப்பீடு செய்வதற்கும் (Evaluation) மற்றும் மீளாய்வு (Review)  செய்வதற்கும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் குழுவினருடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்குமான தத்துவம் (Authority) இந்த ஆலோசனைக் குழுவுக்கு உண்டு.

4.9 தொழிநுட்ப ஆலோசனைகள் வழங்கல்
தேவையேற்படுமிடத்து திட்டங்களை செயற்படுத்தும ;அலகுகளுக்கு தேவையான தொழிநுட்ப ஆலோசனைகளையும் இக்குழு வழங்கும். செயற்றிட்டங்களின் இலக்குகளை அடைதற்பொருட்டு மாற்றங்களையும் ஏற்படுத்த இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறான மாற்றங்கள், திருத்தங்கள் உரியமுறையில் எழுத்துவடிவில் ஆலய நிதியத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருத்தல்வேண்டும்.

4.10அறிக்கையிடல்
கல்வி அபிருத்தி நிதியத்தினால் நிதியுதவியளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எல்லா நிகழ்ச்சித் திட்டங்களும் அவைகளின் முன்னேற்றங்கள், சவால்கள் தொடர்பாக அறிக்கையிடப்படல் வேண்டும். திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்களிடமிருந்து திட்ட முன்னேற்ற அறிக்கையினைப் (Project progress report) பெற்றுக்கொள்வது இக்குழுவின் பொறுப்பாகக் காணப்படும்.

பெறப்பட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை உரிய முறையில் தொகுத்து நிதியத்துடன் பகிர்ந்துகொள்வது ஆலோசனைக் குழுவின் கடமையாகும்.

4.11 ஆலயத்தின் நிதியத்துக்கு வெளியே திட்டங்களுக்காக நிதிதிரட்டல்
ஆலயத்தால் நிதியத்துக்கு வழங்கப்படும் நிதிக்கு புறம்பாக ஆலோசனைக்குழு நிதியத்திற்கான நிதியை திரட்ட நடவக்கைகள் மேற்கொள்ளலாம். கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு நிதியுதவி செய்யக்கூடிய தனிநபர் அல்லதுநிறுவனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் அவர்கள+டாக ஆலயத்தின் கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கு நிதியுதவிகளையும் அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கும் இக்குழு ஓர் இடைநிலையாளராக அல்லது தொடர்பாளராக செயற்படும். இவ்வாறு பெறப்படுகின்ற எந்தவொரு நிதிக்கும் அல்லது அன்பளிப்புக்கும் ஆலய பரிபாலன சபையினூடாகப் பற்றுச்சீட்டினைப் பெற்று நிதிவழங்குனருக்கு கொடுப்பது இக் குழுவின் கடமையாகக் காணப்படும்.

பெறப்பட்ட நிதியில் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் குழுவிடமிருந்து திட்டத்தின் இடைநிலையாளர் என்ற வகையில் திட்டமுன்னேற்ற அறிக்கையினைப் பெற்றுக்கொள்வது இக் குழுவின் பொறுப்பாகக் காணப்படும். நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் சவால்கள் தொடர்பாக குழு நிதியத்திற்கு அறிக்கையிடும்.

4.11.1 நிதி திரட்டக்கூடிய மூலங்கள்
அ. ஞாபகார்த்த நிதிகள்
தன்னார்வமுள்ள தனியொருவரோ அல்லது குடும்பமோ அல்லது குழுவாகவோ தங்களது உறவினர் அல்லது நெருக்கமான ஒருவரின் ஞாபகார்த்த மற்றும் நினைவுகள் என்பவற்றின் பொருட்டு கல்வி அபிவிருத்திக்காக வழங்கும் நிதி மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆ. கல்வி ஆர்வலர்களிடம் இருந்து பெறப்படும் நிதிகள்
கல்விக்காக நிதி வழங்கும் ஆர்வமுள்ள நபர்களிடமோ அமைப்புகளிடமோ இருந்து நிதி மற்றும் அன்பளிப்பினை பெறலாம்.

இ. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவிகள்
புலம் பெயர் அமைப்புகள், அரச, அரச சார்பற்ற நிதி வழங்கும் நிறுவனங்கள், இந்து சமய நிறுவனங்கள், மற்றும் ஆய்வு நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெறும்; நிதியும் ஏற்றுக்கொள்ளப்படும்.

4.12அரச திணைக்களங்களுடன், ஒத்த இலக்குடைய அமைப்புகளுடன் தொடர்புகளை பேணல்
தேவையேற்படும் நிலையில் அரச திணைக்களங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான தத்துவம் இக்குழுவுக்குக் காணப்படுகின்றது. இத்திணைக்களங்களுடன் ஏற்படுத்தப்படும் எழுத்து ரீதியான எந்ததொரு தீர்மானமும் ஆலய பரிபாலன சபையின் அனுமதி பெற்றபின்னரே மேற்கொள்ளப்படவேண்டும்.

ஒத்த இலக்குடைய அமைப்புகளுடன் தேவை நிமித்தம் முறையான ஒப்பந்தங்களுடன் பங்காளியாக (Partnership) இணைந்து செயற்படலாம். இதற்கான மேற்கோள் விதிமுறைகள் (Terms of reference) வரையப்பட்டு ஆலய நிதியத்தின் சமர்ப்பித்து முன்கூட்டிய அனுமதி பெறப்படவேண்டும்.

நேரடியாக அரச கட்டமைப்புகளுக்கு கீழியங்கும் கல்விக்கட்டமைப்புகளுடன் அவைகளின் சேவைகள், செயற்பாடுகள் தொடர்பில் தலையீடுகள் மேற்கொள்ளல், ஆலோசனை வழங்கல், விமர்சனம் செய்தல் என்பன தவிர்க்கப்படவேண்டும். இடையீடு அவசியம் எனக் கருதும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் எழுத்து மூலமாக தொடர்புகொண்டு சேர்ந்தியங்கும் அல்லது ஒத்தாசை வழங்கும் செயன்முறையாக அது வடிவமைக்கப்பட வேண்டும்.

4.13ஒழுக்கக்கல்வியை இடையறு விடயப்பொருளாக (Cross-cutting Theme)  உறுதிப்படுத்தல்
நடைமுறைப்படுத்தப்படும் எல்லா செயற்றிட்டத்திலும் நல்விழுமியம் உளநல ஆரோக்கியம் என்பவற்றை போதிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்தல் வேண்டும். அத்தோடு அதனை அளவிடக்கூடிய தரம்சார் (Qualitative) சுட்டிகளை வடிவமைக்கவேண்டியது அவசியமாகும்.

4.14 பால்நிலைச் சமத்துவம் மற்றும் முரண்பாட்டுக் கூருணர்வு
செயற்படுத்தப்படும் திட்டங்களில் பால்நிலைச் சமத்துவத்தையும் (Gender equality) சமூக அடுக்கமைவு பாரபட்சமின்மையையும் (Hierarchical non-discrimination)  முரண்பாட்டுத் தவிர்ப்பு அணுகுமுறையையும், உறுதிப்படுத்தவேண்டியது ஆலோசனைக் குழுவின் கடமையாகும்.

உறுப்புரை 5
செயற்பாட்டுக் காலம்
இவ்வாலோசனைக்குழு கால வரையறையற்றது. எனினும் உறுப்பினர்களின் செயற்படு காலம் 3 வருடங்களாகும். ஆலோசனைக்குழு உத்தியோகபூர்வமாக அமைக்கப்படும் தினத்தில் இருந்து இந்த கால எல்லை கணிப்பிடப்படும். மூன்றாண்டு முடிவில் உறுப்பினர் மீள்நியமனம் இடம்பெறும்.

உறுப்புரை 6
உறுப்பினர்களின் தகமை
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் நல்லொழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும். கல்விப் புலம், ஆளுமை விருத்தி, திட்ட முகாமைத்துவம், கண்காணிப்பு மீளாய்வு என்பவற்றில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களாகவும் சவால்களை வெற்றிகொள்ள திட்டங்களை நடைமுறைபடுத்தும் பங்காளிகளை வழிப்படுத்தும் திறனுள்ளவர்களாகவும் இருத்தல்.

உறுப்பினர்கள் அரசியல் நடுநிலையாளராக இருத்தல் வேண்டும் எந்தவொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமை பெற்ற அங்கத்தவராகவோ அல்லது நிருவாக உறுப்பினராகவோ இருத்தலாகாது.

ஆலய பரிபாலன சபைக்கு வகைகூறவேண்டிய நிலையில் இவ்வாலோசனைக்குழு இருப்பதால் இரட்டை அங்கத்துவம் தவிர்க்கப்படுகிறது. ஆலய பரிபாலன சபையில் அங்கத்தவராக உள்ள ஒருவர் சமகாலத்தில் இவ்வாலோசனைக் குழுவில் அங்கத்தவராக தெரிவுசெய்யப்படுவது தவிர்க்கப்படுகின்றது.

உறுப்புரை 7
உறுப்பினர்களின் எண்ணிக்கை
ஏழு பேர் கொண்டதாக (7) இக்குழு அமையும். ஆகக்குறைந்தது இரண்டு பெண் உறுப்பினராவது இக்குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

உறுப்புரை 8
உறுப்பினர்களை தெரிவுசெய்யும் முறைமை
ஆலய நிருவாக சபையினரால் கூட்டப்படும்; ஏற்புடையதான ஒரு பொதுக்கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் நியமனம் உறுதிப்படுத்தப்படும்.

கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழுவுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது அக் குழுவின் செயற்திறன் மற்றும் தனித்துவம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு ஆலய பரிபாலன சபையினர் முன்கூட்டியே தங்களது நிருவாக சபைக் கூட்டத்தில் கலந்துரையாடி ஆலோசனைக் குழுவுக்கான உறுப்பினர்களை கருத்தொற்றுமையுடன் முடிவுசெய்து இப்பொதுக்கூட்டத்தில் முன்மொழியமுடியும். உறுப்பினர் ஒருவரை முன்மொழியும் தத்துவம் ஆலய பரிபாலன சபைக்கே உண்டு.

முன்மொழியப்பட்ட பேர்வழிகாரர்கள் பொதுச்சபையின் பெரும்பான்மை ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டு ஆலோசனைச்சபை உறுப்பினராக நியமிக்கப்படுவர். பிரேரிக்கப்பட்ட நபரொருவரை பொதுச்சபை நிராகரிக்கும் பட்சத்தில் பிறிதொருவரின் பெயரை ஆலய பரிபாலன சபை பொதுச்சபைக்கு முன்மொழியும். ஆலோசனைக்குழுவுக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்யும்போது குறித்த நபர் தெரிவு நடைபெறும் கூட்டத்தில் பிரசன்னமாகியிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் அவரது அனுமதி பெறப்பட்டிருக்கவேண்டும்.

8.1 இணைப்பாளர் தெரிவு
ஆலய பரிபாலன சபையினால் கூட்டப்படும் பொதுக்கூட்டங்களில் தெரிவுசெய்யப்படும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தங்களது செயற்பாட்டுக் காலத்துக்குட்பட்டதாக தங்களுக்கிடையிலிருந்து சுயமாக ஒரு உறுப்பினரை குழு இணைப்பாளராகத் (Coordinator) தங்களது முதலாவது ஒன்றுகூடலின்போது தெரிவுசெய்துகொள்ளலாம். தேவையேற்படும்போது பதில் இணைப்பாளர்களையும் தெரிவுசெய்து கொள்ளலாம். சுழற்சி முறையிலும் இணைப்பாளரின் கடமை பகிரப்படலாம். தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரின் விபரம் ஆலய பரிபாலன சபைக்குத் தெரியப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 9
குழுவின் செயற்படு புவியியல் எல்லை
களுதாவளைக் கிராமத்தை முதன்மைப்படுத்திமட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட பிராந்திய கல்வி வலயங்களை உள்ளடக்கியதாதாக அமையும்.

உறுப்புரை 10
கூட்டங்களை நடாத்துதல்
சுயாதீனமான முறையில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டங்களை கூடுவதற்கான உரிமையுடையவர்களாவர். இக்கூட்டங்களுக்கான அறிவித்தலை விடுப்பவராகவும் அறிக்கையிடுபவராகவும் ஆலோசனைக் குழுவின் இணைப்பாளர் செயற்படுவார். தேவைக்கேற்ப இவர்கள் தங்கள் குழுக் கூட்டத்தினை கூட்டிக்கொள்ளலாம்.

உறுப்புரை 11
தீர்மானங்களை நிறைவேற்றல்
ஆலோசனைக் குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றும்போது ஒருமித்த கருத்துடன் முடிவுகள் எடுக்கப்படுவதே வரவேற்கப்படுகிறது. ஏகமனதான தீர்மானம் வெற்றியளிக்காத சந்தர்ப்பம் தோன்றும்போது: புறநடையாக அல்லது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் 5ஃ7 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம். இச்சந்தர்ப்பத்தில் தீர்மானத்தை ஆதரிக்கும் ஐவரில் ஆகக் குறைந்தது ஒருவராவது பெண் உறுப்பிராக இருக்கவேண்டும்.

உறுப்புரை 12
ஆலோசனைச் குழுவின், அங்கத்தர்களின் இருப்பு வறிதாதல் மற்றும் பதவி விலகல்
அங்கத்தவர்களின் செயற்படு காலம் மூன்று வருடங்களாகும். மூன்றாண்டு பதவிக்காலம் முடியும்போது உறுப்புரிமை தானாகவே வறிதாகும் (Termination).

உறுப்பினர் ஒருவரின் மரணத்தின் போது உறுப்புறுமை வறிதாகும்.

உறுப்பினர் ஒருவர் 21 நாள் எழுத்து மூல முன்னறிவித்தலுடன் ஒரு தாமாக பதவிவிலகும்போது வறிதாகும்

உறுப்பினர் ஒருவரினதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோரினதோ பங்களிப்பு திருப்திகரமானதாக இல்லாதவிடத்து அல்லது உறுப்புரை 6ல் குறிப்பிடப்பட்ட உறுப்பினர் ஒருவருக்கான அடிப்படைத் தகுதிக்கு முரணானவர் என உறுதிப்படுத்தப்படுத்தப்படும் பட்சத்தில் அவரது அல்லது அவர்களது பதவியை பொதுச்சபை அனுமதியுடன் வறிதாக்க ஆலய பரிபாலன சபைக்கு அதிகாரம் உண்டு.

பதில் உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் அடுத்ததாக நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படவேண்டும். அதுவரை தற்காலிக உறுப்பினர் அல்லது உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆலய பரிபாலன சபைக்கு உண்டு.

ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட தற்காலிக உறுப்பினர்களை நியமிக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பம் தோன்றுமிடத்து ஆலோசனைக்குழு கலைக்கப்பட்டு உறுப்புரை 6க்கு அமைய புதிய குழு அமைக்கப்பட வேண்டும்

செயற்படு காலமாகிய மூன்று ஆண்டுகள் முடிவதற்கு முன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆலோசனைச் குழுவை கலைப்பதற்கு பிள்ளையார் ஆலய பரிபாலன சபை விரும்பினால் பொதுச் சபையினை கூட்டி தகுந்த காரணத்தை முன்வைத்து பொதுச்சபை அனுமதியை பெற்று கலைக்கலாம்.

பதவி வறிதாதலால் ஏற்படும் வெற்றிடங்கள் அடுத்துவரும் பொதுச்சபை கூட்டத்தில் நிரப்பப்படும்

உறுப்புரை 13
ஆலோசனைக் குழுவின் அதிகார வரையறைகள்
அ. பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் அனுமதி பெறாமல் எந்தவொரு செயற்றிட்டத்தையும் தன்னிச்சையாக ஆலோசனைக்குழு செயற்படுத்த முடியாது.

ஆ. நேரடியாக திட்டங்களை நடைமுறைப்படுத்தும் குழுவாக இவ் ஆலோசனைக் குழு செயற்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.

இ. உத்தியோகப+ர்வமாக கல்விசார் சேவைகளுக்கென்று பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுடன் மாத்திரமே செயற்றிட்ட தொடர்புகளை ஆலோசனைக்குழு பேணமுடியும், இதற்குப்புறம்பாக மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களை ஆலோசனைக்குழு மேற்கொள்ளும் பட்சத்தில் அது தனிநபர்களுடனான தொடர்பாடலாகவே கொள்ளப்படும்.

ஈ. ஆலோசனைக்குழு அதன் ஆளுகைக்குட்பட்ட திட்டங்கள் தொடர்பில் மட்டுமே தலையீடு செய்யமுடியும் ஆலய பரிபாலன சபையின் நடவடிக்கைகளிலோ, கருத்துக்களிலோ தலையீடு செய்வதோ அல்லது கருத்துத்தெரிவிப்பதோ தவிர்க்கப்படவேண்டும்.

உறுப்புரை 14
பொதுவான மட்டுப்பாடுகள்
அ. கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள் எதுவும் ஆலய செயற்பாடுகளில் நேரடியாக சம்பந்தம்பெறாது.

ஆ. உறுப்புரை 2 இன் பிரகாரம், கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்களை ஆலய பொதுக்கூட்டங்களுக்கு விளக்கம் கோரும் நோக்குடன் அழைப்பு விடுவதோ அல்லது அவ்வுறுப்பினர்களை ஆலய பொதுக்கூட்டங்களில் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் சார்பாக விளக்கமளிக்குமாறு கோருவதோ தவிர்க்கப்படுகின்றது.

இ. கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் சார்பாக ஆலய பொதுக்கூட்டங்களில் எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கமளிப்பது ஆலய பரிபாலன சபையினரின் கடப்பாடாக காணப்படும்.

ஈ. கல்வி அபிவிருத்தி சார்பாக திட்டங்களுக்கு நிதியளிக்கப்படும்போது ஒத்த குறிக்கோள்களைக் கொண்ட திட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதியளிப்பது தவிர்க்கப்பட்டு கல்வி அபிவிருத்தி தொடர்பான அனைத்து விதமான விடயப்பரப்புக்களும் அல்லது உடனடியாக கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயங்களும் நிதியளித்தலுக்குள் உள்வாங்கப்படுவதை ஆலோசனைக் குழுவினர் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதை ஆலய பரிபாலன சபையினர், ஆலோசனைக் குழுவினர் வழங்கும் தரவுகளுடாக உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

உறுப்புரை 15
திருத்தங்கள்
இவ்வரைபில் திருத்தங்கள் தேவைப்படுமிடத்து அதனை ஆலய பொதுச்சபைக் கூட்டத்தில் வெளிப்படுத்தி திருத்துவதற்கான பொதுச்சபையின் அனுமதியைப்பெற்று திருத்திக்கொள்ளலாம்.

ஆலய யாப்பில் திருத்தங்கள் செய்யப்படும்போது அதற்கேற்ப இவ்வரைபில் குறிப்பிடப்பட்ட ஆலய யாப்பின் உசாத்துணைச் சரத்துகள் திருத்தியமைக்கப்படவேண்டும்.

பின்னிணைப்பு
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரின் வழிகாட்டலுடன் ஆலய பரிபாலன சபையால் ஒழுங்கு செய்யப்;பட்ட 27/07/2014 திகதிய விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதன்படி கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழுவின் செயற்பாட்டு எல்லை, அக்குழுவின் பங்குகள் செயற்பாடுகள் தொடர்பில் வழிகாட்டி வரைபொன்றினை உருவாக்கும் நோக்கில், அக்கலந்துரையாடலில் அன்றைய தினத்தில் தெரிவுசெய்யப்பட்ட கீழ்க்கையொப்பமிடும் விசேட குழு உறுப்பினர்;களால், மேற்கூறப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களையும் ஆலய நிருவாகசபை உறுப்பினர்களின் கருத்துக்களையும் கவனத்தில்கொண்டுகளுதாவளைப் பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி நிதியத்துக்கான ஆலோசனைக் குழு- வழிகாட்டி வரைபு உருவாக்கப்பட்டது.

01. திரு.க.சுந்தரலிங்கம் —————————————————-
02. திருமதி.த.சபாரெத்தினம் —————————————————-
03. திரு.ச.தியாகராசா —————————————————-
04. திரு.வ.நாகேஸ்வரன் —————————————————-
05. திரு.த.சடகோபன் —————————————————-
06. திரு.இ.ஞானசேகரன் —————————————————-
07. திரு.இ.நேவிநாதன் —————————————————-
08. திரு.கு.பிரணவன் —————————————————-
09. திரு.பே.காப்தீபன் —————————————————-

திகதி:——————-

மேற்படி வரைபு __/__/2014திகதிய ஆலய பொதுச்சபைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகின்றோம்.

ஆலய வண்ணக்குமார் ஒப்பம்.

01. திரு.க.வ.வேல்வேந்தன் (பெத்தாக்கிழவி குடும்பம்) ——————————————–
02. திரு.வே.வ.குணாளன் (பேனாச்சி குடும்பம்) ——————————————–
03. திரு.பொ.வ.வீரசிங்கம் (சுரக்காமூர்த்தி குடும்பம்) ——————————————–
04. திரு.சி.வ.பத்மநாதன் (போற்றிநாச்சி குடும்பம்) ——————————————–
05. திரு.ச.வ.நேசராசா (செட்டி குடும்பம்) ——————————————–
06. திரு.இ.வ.தியாகவினோதன் (வள்ளிநாயகி குடும்பம்) ——————————————–

திகதி:——————-

திருவிழா – 2014

கடந்த 2014-06-25 ம் திகதி திருவிழா ஆரம்பமாயது.

 

Pillayar-2013

திருவிழா 2012 வீடியோ


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் – வரலாறு

ஊர்ப் பெயர் விளக்கமும் :- ஆலயத் தோற்றமும்

இடங்களுக்கு பெயர் வைக்கும் போது அவை காரணப் பெயர்களாக அமைந்து விடுவதே பெரும்பான்மையான வழக்கு, யாழ்பாடி பரிசு பெற்ற மணற்றிடர் யாழ்ப்பாணம் ஆயிற்று, மூன்று கோணம் உள்ள மலை திரிகோணமலை என்றும், திருக் கோண மலை என்றும் பெயர் பெற்றது. மட்டு மட்டும் களப்பாள் இருந்தது மட்டுக்களப்பாயிற்று, புலியின் ஆண்ட தீவு புலியந்தீவு, செட்டிகள் பாளையம் இட்ட இடம் செட்டியாளையம், திமிலர் வாழ்ந்த இடம் திமிலர் தீவு, கொக்கட்டி மரங்கள் நிறைந்த இடம் கொக்கட்டிச்சோலை, புன்னை மரங்கள் நிறைந்த இடம் புன்னைச் சோலை, ஆலமரங்கள் நிறைந்த இடம் ஆலை அடிச் சோலை, மண்டு மரங்கள் நிறைந்த இடம் மண்டூர், பனிச்சை மரங்கள் நிறைந்த இடம் பனிச்சங் கேணி, பனிச்சை அடி முன்மாரி (காயாங்கேணி), களுவன் குடியிருந்த இடம் களுவன் கேணி, வீரர்கள் வாழ்ந்த முனை வீரமுனை இவ்வாறு இடங்களின் பெயர்கள் காரணப் பெயராக அமைந்திருப்பது போல களுதாவளையின் பெயரும் காரணப் பெயராகவே அமைந்துள்ளது. எனினும் அதற்கான விளக்கங்கள் வேறுபடுகின்றன. கள்ளு – தா – வெள்ளையா என்று கேட்ட சொற்றொடர் இக்கிராமத்தின் பெயரானதாக சிலர் கூறுவர். தென்னை மரத்தில் இருந்து தென்னங் கள்ளு பெறப்படுகின்றது பனங் கள்ளு மட்டக்களப்பு மாவட்டத்தில் வழக்கில் இல்லை தென்னங் கள்ளு பெறுவதற்கு தென்னை மரங்கள் தேவை அதனை விற்பதற்கும், குடிப்பதற்கும் மக்கள் தேவை, மக்கள் வாழ்கின்ற இடத்திற்கு அது தோற்றம் பெற்ற உடனையே பெயர் ஒன்று ஏற்பட்டு விடும் எனவே இக்காரணப் பெயரின் விளக்கம் பொருத்தமானமாக தெரியவில்லை. காளி தேவாலய என்ற பெயர் மருவி களுதாவளை என்று மாறியதாகவும் சிலர் கூறுவர். காளி, பொற் கொல்லர்களின் குல தெய்வம் களுதாவளையில் பொற் கொல்லர் பரம்பரை வாழ்ந்தமைக்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லை. களுதாவளையின் தென்மேற்கு மூலையில் மட்டக்களப்பு வாவிக்கு அப்பால் பிரசித்தி பெற்ற பத்திர காளி கோவில் ஒன்று உண்டு அங்கு பொற் கொல்லர்கள் வாழ்கின்றனர். அவ் இடத்திற்கு போர் ஏறு தீவு (போரதீவு) என்று பெயர் வழங்குகின்றது. எனவே இதுவும் வலு இழந்த விளக்கமாகின்றது.

பூமியின் தோற்றம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. சூரியனில் இருந்து பிரிந்த அக்கினிப் பிழம்பு படிப்படியாக குளிர்ந்து கற்பாறையாக மாறி. பௌதிக இராசாயன உயிரினவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி மெல்ல மெல்ல சிதைவடைந்து தாவரங்கள் உயிரினங்கள் வாழக் கூடிய சூழ் நிலை உருவானதாக கூறுவர். அந்த வகையில் கல்லுத் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மனிதர்களை ஆதிவாசிகள் என அழைக்கின்றோம். வேட்டையாடி வாழ்ந்த ஆதிவாசிகளை வேடர்கள் என பெயரிட்டனர். உலகின் ஆதிவாசிகள் இவர்களே என்பதை ஆய்வாளர்கள் ஏற்றிக் கொள்கின்றனர். வேடர்கள் தமது வெற்றிக்கு வாய்ப்பாக கடவுளை வழிபட்டமை தெரிய வருகின்றது. வெற்றிலைச் சடங்கு என்பது வேடர்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. பெரிய மரங்களின் கீழ் உள்ள சிறிய பற்றைக் காடுகளை வெட்டி அகற்றிய பின் வெற்றிலையால் மடை பரவி ஆடிப்படி தெய்வ வழிபாடு நடத்தினர். ஆலயங்;கள் என்ற அமைப்போ விக்கிரகங்களோ காணப்பட்டதாக தெரியவில்லை சங்க இலக்கிய பாடல்களில் கூறப்படும் ‘வேலன் வெறியாட்டு’ என்பதோடு இதனை ஓப்பிடலாம். களுதாவளைப் சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயம் பற்றி கூறுகின்ற களுவை நகர் களுதேவாலய கல்வெட்டு ஊர்ப்; பெயருக்கான விளக்கத்தை உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றது. இக் கல் வெட்டு கையெழுத்துப் பிரதியாக உள்ளது. இலங்கையில் வரலாற்றுத் துறை பேராசிரியராக விளங்கும் சி. பத்மநாதன் அவர்கள் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் 1994 ஆண்டு வெளிட்ட இலங்கையின் இந்துக் கோயில்கள் தொகுதி – 1 நூலில் 174 – 184 வரையில் உள்ள பக்கங்களில் இக் கல்வெட்டை வெளியிட்டு உள்ளார். இந்நூலின் தொகுப்பாசிரியராகவும் இக் கல் வெட்டின் பதிப்பாசிரியயராகவும் பத்மநாதன் அவர்களே செயற்பட்டு உள்ளார். கல் வெட்டுப் பாடல்களை ஆராய்ந்து பொருள் விளக்கம் எழுதியவர் இணுவையூர் பண்டிதர் கா. செ. நடராஜா அவர்களாவார். ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டவரும் இவரே ஆவார். இவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ள இக் கல் வெட்டினை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் போது களுதாவளையின் பெயர் களுவைநகர் என்பது தெரிகின்றது. அன்று நாழிகை ஒன்பதிலே களுவைநகர் ‘களுதேவ ஆலயமாம் வெற்றிலைச் சடங்கு செய்யும் இடம் இதுதான் என்று கண்டு. இன்று இதில் நாம் கடமையைக் கருதி அங்கு தங்கினரே’ என்று கல் வெட்டுப் பாடலில் கூறப்பட்டு உள்ளது. இதன்படி களுவை நகர் களுதேவாலயம் என்ற இருபெயர்கள் கூறப்படுவதை அவதானிக்கின்றோம். வேடர்களின் பெயர்களில் நம்பி, வேலன், களுவன் என்பவை பிரசித்தமானவை. காடடர்ந்த பிரதேசத்தில் வேட்டையாடித் திரிந்த களுவன் என்ற வேடர் தலைவன் தான், சுற்றிப் பார்த்த இடங்களிலே கடவுள் வழிபாட்டுக்கு பொருத்தமான ஒரு இடத்தினைக் கண்டான். வெற்றிலைச் சடங்கு செய்வதற்கு ஏற்ற விதத்தில் அதனை தயார் பண்ணினான் வேட்டையில் தடங்கல்கள் ஏற்படும் போதும் கோதாரி எனப்படும்.

தொற்று நோய்கள் ஏற்பட்ட போதும், தங்கள் குழுக்களில் உள்ளோரின் மனைவிமாரின் சுகப் பிரசவத்தின் போது ‘வெற்றிலைச் சடங்கு’ என்னும் வெற்றிலைச் சடங்கு செய்தனர். ஊது குழல், கொம்பு வாத்தியம், சங்கு, தவில் போன்றவற்றை ஒலித்துக் கொண்டு உரு ஏறி ஆடிப்பாடி சடங்கினை நடத்தினர். களுவனுடைய வணக்க தலமான இதனை களுதேவாலய என்ற பெயரால் அழைத்தனர். இந்த இடம் மட்டக்களப்பு வாவிக்கு அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது. இந்தக் காலத்திலே களுதாவளையில் கடற்க்கரையை அண்மித்திருந்த பகுதியில் தென்னந்தோப்புகளே இருந்திருக்கின்றன. மணற்பிரதேசமான இது வளமான தென்னைச் செய்கைக்கு வாய்ப்பாக இருந்துள்ளது. இப் பொழுது மக்கள் குடியேறியுள்ள காணிகளின் பழைய உறுதிகள் அவை தென்னந் தோட்டங்கள் என்பதை நிரூபிக்கின்றன. கோவிந்தன் வத்தை வன்னியன் வத்தை, சோனிட வத்தை, பாம்லண்ட தோட்டம் என்ற பெயர்கள் பழைய உறுதிகளில் காணப்படுகின்றன. இந்த தென்னந் தோட்டங்களில் அதன் பராமரிப்புக்காக சில குடும்பங்கள் வாழ்ந்தன. அந்த குடும்பங்களில் இருந்து பெருகியவர்களே இக்கிராமத்தில் வாழ்கின்றனர். சனப் பெருக்கம் அதிகரித்து வர அவர்களது தேவைகளும் அதிகரித்தன. அயலில் இருந்த கடலிலும், ஆறு குளம் என்பவற்றிலும் மீன் பிடிக்கத் தொடங்கியவர்கள் ஆற்றங் கரையோரமாக உள்ள காட்டை அழித்து களனிகளாக்க தொடங்கினர் காடுகள் அழியத் தொடங்கியதும் விலங்குகளும் பறவைகளும் குறையலாயின. வேடர்களின் வேட்டைக்குரிய வாய்ப்பு அருகத் தொடங்கியது. மக்கள் நடமாட்டம் அதிகரித்ததும் வேடர்கள் தமது இருப்பிடத்தையும் மாற்றலாயினர். தேற்றத்தீவு குடியிருப்பு என்று இப்பொழுது அழைக்கப்படும். இடம் பூர்வீகமான ஒரு குடியிருப்பு என்று கருதவேண்டியுள்ளது. இங்கு மண்முனைப் பற்றில் வன்னிமையின் சந்ததிக்ள மிகச் செல்வாக்கோடு வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் அங்கு வாழ்கின்றனர். வேடர்கள் இடம் பெயர்ந்தாலும் வேடர்களின் வழிபாட்டு இடம் களுதேவாலய என்ற பெயரில் வழங்கி வந்தது. கலியுகவரதனாகிய கந்தப்பெருமானை கதிர்காமத்தில் வழிபடச் செல்வோர் கால் நடையாகச் செல்வதே வழக்கம். அக்காலத்தில் வாகன வசதிகளோ மிகக் குறைவு யானை வண்டில், குதிரை வண்டில், மாட்டு வண்டில், என்பவற்றை வசதி உள்ளோரே வைத்திருந்தனர். எனினும் கதிர்காமம் செல்லும் பாதை இவற்றில் பிரயாணம் செய்வதற்கு ஏற்றதாக செப்பனிடப்படவில்லை. அதனால் கள்வர்களுக்கும் விலங்குகளுக்கும் பயந்து அடியார்கள் கூட்டம் கூட்டமாக யாத்திரை மேற் கொண்டனர். பகற்பொழுதில் பாதை யாத்திரை மேற்கொண்டு இரவில் தங்கி இழைப்பாறிச் செல்வதே வழக்கம் ஆல், அரசு, வேம்பு, நாவல், இலுப்பை, புளி கூழாவம்மி, கொன்றை அடம்பு என்பனவாய குளிர்தரு நிழல் மரங்களின் ஊடாக கதிர்காம பாதை யாத்திரைப் பாதை அமைந்திருந்தது. அப்பாதையில் களுதேவாலய என்று அழைக்கப்பட்ட இடம் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. முற்யகாலத்தில் முதிவர்களே கதிர்காம யாத்திரை மேற்கொண்டனர். தமது நிலபுலங்களையும் சொத்துப்பத்துக்களையும் பங்கிட்டு, கொடுக்க வேண்டியவர்களுக்கு முறைப்படி கொடுத்த பின் கோவிலுக்குச் சென்று அமுது கொடுத்து உருத்திராட்சை மாலை தரித்து பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து முருகப் பெருமானை மட்டும் பற்றி பிடித்துக் கொண்டு துறவிகள் போன்று புறப்படுவர். அவர்கள் கதிர்காமம் சென்று திரும்பி வந்து தாம் மாலை போட்ட இடத்தில் உருத்திராட்ச மாலையினை கழற்றும் வரை அவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை. அப்பாச்சாமி, அம்மாச்சாமி, பெரியசாமி, சின்னச்சாமி என்று எல்லோரும் சாமிகளாகிவிடுவர். இந்தச் சாமிகள் கதிர்காம யாத்திரை செல்லும் போது, வேடர்கள் வெற்றிலைச் சடங்கு நடாத்திய இடத்தில் தங்குவது பாரம்பரியமான வழக்கு. துப்பரவு செய்யப்பட்ட இடமாக இருந்தமையாலும் ஆறு குளம் என்ற நீர் வசதிகள் இருந்தமையாலும் அடர்ந்த மருத மரச் சோலையின் குளிர் நிழல் நிறைந்திருந்தமையாலும், இயல்பாகவே அவ்விடத்தில் காணப்பட்ட அருட்பிரவாகத்தினாலும் பயம் இன்றி அவ்விடத்தில் தங்கிச் சென்றனர். இவ்வாறு கதிர்காம யாத்திரை செய்தோர் அவ்விடத்தில் பூசை வழிபாடுகளையும் செய்வது வழக்கமாயிற்று கொக்கட்டிச்சோலையில் இருந்து புறப்பட்ட குருமார் இருவர் இவ்விடத்தில் தங்கினர்.

நாளாந்த கருமங்களை முடித்து சிவலிங்க பூசை செய்தனர். அப்பொழுது அவர்கள் பூசை செய்த இடத்திற்கு தென்மேற்கே ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்புக் கண்டனர். குளத்திலே தோய்ந்த உலர்ந்த ஆடை தரித்து சிவலிங்க பூசை செய்த அவர்கள் தாம் பூசை செய்த இடத்தில் பூவினுள் மறைந்திருந்த சிவலிங்கம் ஒன்றைக் கண்டனர். அதனை தம்முடன் எடுத்துச் செல்ல முயன்றனர். அது முடியாமல் போயிற்று அடியார்கள் ‘நிதி வளர சன்னதி தான்தோன்றுமீசன் ஆலயம் பதிவளர நடத்தி வரும் நாளையிலே விற்பரமாம். குருலிங்கமக் குருவோடு பண்பாரம் இருவருமாய் கதிரை நகர் நடந்தவாறே செல்லும் வழி தனிலே அன்று நாழிகை ஒன்பதிலே களுவை நகர் களுதேவாலயமாம் வெற்றிலைச் சடங்கு செய்யும் இடம் இதுதான் என்று கண்டு. இன்று இதில் நாம் கடமையைக் கருதி தங்கினரே. தங்கிய பின் நாகம்மை தென்மேற்கில் ஆவரை மரத்தண்டையில் இருப்புக் கண்டார். கண்டதுவும் காலைக் கடன் முடித்து உடன் பார்ப்போம் என் குளத்தில் இறங்கி பின் தோய்ந்து உலர்ந்து சிவலிங்க பூசை செய்வதென தெட்கைக் கட்டு திறக்கலானார். திறந்து இவர் இருவரும் செய்து சிவலிங்க அட்சதைகள் முடித்த பின்பு திரிலிங்க சிவபூசை செய்த குருபத்திரம் பூ இவற்றுடனே லிங்கம் ஒன்றை பூமியின் கண் வைக்கலானார். வந்து இவர் களுவை நகர் பார்க்கும் போது லிங்கம் அங்கு பூவால் மறைந்திருத்தல் கண்டு மதிமயங்கி மாறி நின்று வணங்கலுற்றார்.’

இக்கல் வெட்டுப் பாடல் மூலம் இதனை நாம் அறிகின்றோம். மகிமை வாய்ந்த சிவலிங்கம் பற்றி கேள்வியுற்ற ஊரவர்கள் விரைந்து வந்து அவ்விடத்தில் ஒன்று கூடினர். நில மட்டத்தில் இருந்த சிறிய சிவலிங்கத்தை அரிக்கஞ்சட்டி ஒன்றினால் மூடி இலைகுழைகளால் மறைத்துக் கட்டி கொத்துப் பந்தல் இட்டனர். அன்று தொடக்கம் இவ்விடத்தில் பொதுமக்களின் வழிபாடு ஆரம்பமாயிற்று ஆரம்பத்தில் இது சிவலிங்க வழிபாடாகவே தோற்றம் பெற்றது. வெள்ளிக் கிழமையில் பொங்கல், பூஜைகள் இடம் பெற்றன. அற்புதங்களும் அதிசயங்களும் அருட்பிரவாகமும் பெருகப் பெருக அடியார் கூட்டமும் அதிகரித்தது. ஆலயமும் ஒலைக் குடிசை, களிமண், கோவில், கற்கோவில் என்று மாற்றம் பெறலாயிற்று. ஆவரை மரத்தடி நாக தம்பிரான் வழிபாடும் இதனோடு இணைந்து கொண்டது. நாகதம்பிரானுக்கு பூஜையின் போது பால் பழம் கரைத்து வைத்தனர். நில மட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை அடியார்களின் தரிசனத்திற்காக உயர்த்தி வைக்கும் முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. குருக்கள்மாரின் உதவியுடன் அதனை தோண்டிக் கிளப்ப முற்பட்டனர். அது சலம் பொறுக்க நீண்டு சென்றதாக கல்வெட்டு கூறுகின்றது. இஷ்டலிங்க தாரியாம் சங்கமக்குருமாரில் நீலவண்ணிக் குருவும் பெரிய பிள்ளைப் பண்டாரம் என உற்ற சோளிய வேளாளராம் இவர். இருவர் தமையும் வரவழைத்து பேசும் போது இட்டலிங்கம் பூமிமேல் சலம் பொறுக்க போனவாறு விளக்கலுற்றார் என்பதால் அறிய முடியும். இவ்வாறான செய்திகளை எல்லாம் அறிந்த மணியாள் பூபால வன்னிமை என்பவர் இங்கு வந்து மணியாள பூபால வன்னிமை தான் பார்க்கும்போத இஷ்டலிங்கம் என வணங்கு இலங்கை தன்னிடத்தில் ஈசனிட ஆலயங்கள் உண்டு பாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் பிள்ளையார் கோயிலிது அதுவாக. சிவபிரானைப் பணியும் என்று இயம்பினார் வன்னிமையும் இயம்பினாரே.

சிவலிங்கத்தை பிள்ளையாராக வழிபடும் படி கூறியதாக இக் கல்வெட்டுப் பாடல் வரிகள் கூறுகின்றன. இவ்வாறு களுவன் வெற்றிலைச் சடங்கு செய்த இடத்தில் அமைந்த இவ்வாலயமும் களுதேவாலய என்ற பெயராலேயே வழங்கப்படலாயிற்று கண்டி சிங்கள மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இப்பிரதேசத்தில் களுதேவாலய என்பது. மருவி மருவி களுதாவளை என்றாயிற்று. லிங்கத்தின் பெயரும் பிள்ளையாரின் பெயரும் ஒன்றிணைந்து சுயம்பு லிங்கப் பிள்ளையார் என்று ஆலயத்தின் பெயர் அமைந்தது. இதனால் களுவை நகர் என்று வழங்கிய கிராமத்தின் முன்னாள் பெயர் மறைய அதனோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பெயரான களுதாவளை என்பது கிராமத்தின் பெயராயிற்று இப் பொழுது களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயம் என்ற பெயர் நிலை பெற்றுவிட்டது. எனவே கிராமத்தின் பெயரும் ஆலயத்தின் பெயரும் காரணப் பெயர்களாகவே அமைந்துள்ளமை. கல்வெட்டின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. தகுந்த ஆதாரங்கள் இன்றி இதனை மறுத்துரைப்பது மதியீனமாகும்.

களுதாவளையில் ஆதி வாசிகளான வேடர்கள் செல்வாக்கு இருந்தது என்பதற்கு அகச் சான்றுகள் சில உள தேற்றாத்தீவு குடியிருப்பு என்றும் சிறிய கிராமம் இன்றும் தனித்துவமாக விளங்குகின்றது. மட்டக்களப்பு வாவிக்கும் கிராமிய குளத்திற்கும் இடையே மேட்டு நிலப்பகுதி ஒன்று காணப்படுகின்றது. வயது முதிர்ந்த பெரு விருட்சங்களான மரங்கள் நிறைந்த சிறிய கிராமம் இது. இற்றைக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இக்கிராமம் அடர்ந்த காட்டினுள் அமைந்திருந்தது. வெற்றிலை தோட்டங்கள் செய்கை பண்ணப்பட்டமைக்கான உயர்ந்த மேடுகளும் காணப்படுகின்றன. ஆதி வீரபத்திரர் ஆலயம் ஒன்று அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இவ் வழிபாடு வெற்றிலைச் சடங்கு போன்று நடை பெற்று வந்துள்ளது.

இங்கு வாழ்ந்தோர் பொருளாதார வளமுள்ளவர்களாக இருந்தமையும் தெரிகின்றது. மாடு, ஆடு பட்டிகளோடு நெற் களஞ்சியமான பட்டறைகளோடு வாழ்ந்துள்ளனர். மண்முiனைப் பகுதியை அதிகாரம் செய்த வன்னிமைகளின் சுந்ததியினர் இங்கே வசித்துள்ளனர். செட்டிபாளையம் ச, ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் (நடை பெறும்) ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெறும், பூரண கும்பச்சடங்கிற்கு இங்குள்ள மக்களே நெல் கொண்டு செல்கின்றனர். இது பாரம்பரிய நடைமுறை ஆதி வாசிகள் குடியிருப்பு பொது மக்களின் குடியிருப்பாக மாறியிருக்க வேண்டும். இக்கிராமத்திற்கு கிழக்கே பன்குளம் என்னும் பெயரில் கிராமியக்குளம் அமைந்துள்ளது. இக் குளத்தின் வடமேற்கு மூலையில் கன்னி நாவற் திடல் என்று ஒரு இடத்திற்கு பெயருண்டு. சுமார் அரை ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கி மேட்டு நிலம் இற்றைக்கு சுமார் இருபத்தி ஐந்து (1978) வருடங்களுக்கு முன்னர் வரை இவ்விடத்தில் பெரிய நாவல் மரங்களும் விழுதுவிட்டுப் பரந்து ஆல மரங்களும் காயான் பற்றைகளும் நிறைந்திருந்தன. மட்டக்களப்பில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றினால் இவ்விடத்தில் நின்ற மரங்களும் முறிந்து வீழ்ந்தன. வெங்காயம், மிளகாய், கத்தரி ஆகிய பயிர்கள் செய்வதற்காக இவ்விடம் துப்பரவு செய்யப்பட்டது. வேடுவர்களின் கன்னிப் பெண் ஒருத்தி இந்த நாவல் மரத்திடலில் குடியிருந்தமையால் கன்னி நாவல் திடல் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுவர். இப் பன்குளத்தின் வடகிழக்கு மூலையில் வலைகட்டி, முயல், பன்றி, மான் முதலிய மிருகங்களை வேட்டையாடியதால் வலைகட்டி, வலையிறவு என்ற பெயர்கள் வழங்கியதாக சொல்கின்றனர். களுதேவாலய கல்வெட்டில் ஆலயத்தின் தோற்றம் பற்றி கூறுகையில் இத்தகைமை கோயிலுக்கு வடபாலகா வலைக்கட்டி வேடுவர்கள் வணங்கினார்கள் என்று கூறப்பட்டு இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தோடு கோவிலுக்கு தென்புறமாக ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பம்பி அமைந்திருக்கும் இடத்திற்கு அண்மையில் குளக் கட்டில் இருந்து சுமார் 50 மீற்றர் கிழக்கே வடக்கு தெற்காக ஒரு கட்டு அமைந்துள்ளது. களுதாவளைத் துறைக்குச் செல்லும் குளக் கட்டினையும் மாவடி ஒழுங்கையுடன் நீண்டு செல்லும் கட்டினையும் இந்தக் கட்டு தொடுத்து கிடக்கின்றது. இதனை புதிதாக அமைக்கும் முன்பு பழங்காலத்தில் அவ்விடத்தில் ஒருகட்டு அமைந்திருந்து. அது தூர்ந்து போனமைக்கு சான்றுகள் காணப்பட்டன. வேடன் கட்டு என்று அதற்கு பெயர் வழங்கியது. வேடன் கட்டிற்கும் குளக் கட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. ஆத்தியடித்திடல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இத்திடலில் விழுது விட்டுப் பரந்த ஆலமரங்களும் காயான் பற்றைகளும் காரை வனங்களும் நிறைந்திருந்தன. குளக்கட்டில் ஆத்தி மரங்கள் அநேகம் காணப்பட்டன. கன்னா நாவற்திடல், ஆத்தியடித்திடல் என்ற பெயர்களை நாம் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேடர்களின் செல்வாக்கினால் பயிரிடப்பட்ட வெற்றிலைச் செய்கையும் பொது மக்களின் கைக்கு மாறி இன்று வரை இங்கு நிலைத்து நிற்கின்றது. களுதாவளை மக்கள் இவ் வெற்றிலையை மங்கலப் பொருளாகவும், புனிதமுள்ளதாகவும், சீதேவியாகவும் போற்றுகின்றனர். களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நாளாந்த பூiஐயில் வெற்றிலை முக்கிய இடம் பெறுகின்றது. விசேட பூiஐகள் திருவிழாக்களின் போது வெற்றிலையும் பாக்கும் சேர்ந்து தாம்பூலமாக பெரியதோர் வட்டாவில் மடை வைக்கின்றனர். இதுவும் வேடர்களின் வெற்றிலைச் சடங்கின் எச்ச சொச்சம் எனலாம். தமிழர்கள் பூமிக்கு நானிலம் என்று பெயர் இட்டனர். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றனர். இங்கு வாழ்ந்தோர் தினை விளைவித்து தேன் குடித்து வேட்டையாடினர். இங்குள்ளோரை வேடர் என்றனர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்பட்டது. இங்குள்ளோர் மந்தை மேய்த்து பால், தயிர், இறைச்சியுண்டு வாழ்ந்தனர். இவர்களை இடையர் என்றனர். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்பட்டது. இங்கு உழுதுண்டு வாழ்ந்த இவர்களை உழவர் என்றனர். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப் பெயரிடப்பட்டது. உப்பு விளைவித்தும் மீன்பிடித்தும் வாழ்ந்த இவர்களை பரதவர், நுழையர் என்றனர். தமிழ் நாட்டில் பாலை என்ற நிலம் இயற்கையில் காணப்படவில்லை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மழை இல்லாத போது முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் அவற்றின் இயல்பு நிலையில் இருந்து மாறி பாலை நிலமாகும். என்பதை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பழிந்து நடுங்கு துயர் உறுத்து
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்.
என்று கூறப்பட்டுள்ளது.

பருவ மழை பெய்ததும் பாலையாக காட்சி தந்த நிலம் பழைய படி குறிஞ்சி முல்லையாக மாறும். குறிஞ்சி நில வேடர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த குடியிருப்புகளை குறிஞ்சி என்றனர். இந்தியாவில் பாஞ்சாலங் குறிச்சி. என்ற பெயரில் இடங்கள் உள்ளன. களுதாவளையில் 1ம் குறிச்சி, 2ம் குறிச்சி 5ம் குறிச்சி, 4ம் குறிச்சி என்ற பெயரில் கிராமம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கிராமங்களில் வட்டாரம் பிரிவு சதுர்க்கம் கோட்டம் என்ற பெயர்கள் வழங்க களுதாவளையில் குறிச்சி என்ற பெயர் நிலைத்து நிற்கின்றது. வேடர்களின் குடியிருப்புகளை அண்மித்த இடங்களில் கொத்தியாபுலை மண்டபத்தடி என்னும் பெயர்களும் வழங்குவதுண்டு. களுதாவளையிலும் கொத்தியாபுலை, மண்டபத்தடிக் காடு என்ற இடப் பெயர்கள் வழங்கி வந்தன. படிப்படியாக அவை இன்று மறைந்து வருகின்றன.

களுதாவளையில் தந்தை வழி மரபை அடிப்படையாகக் கொண்டு வடசேரி தென்சேரி என்ற வாரம் பிரிந்து நின்று கொம்பு முறித்து விளையாடியமைக்கு ஆதாரங்கள் பல உள. இக் கொம்பு முறி விளையாட்டு பல நாட்களுக்கு தொடர்ந்து நடை பெற்று வந்தது. சிறப்பான இவ் விழாவினைக் காண சாய்ந்தமருது நாகமுனை (நற்பிட்டி முனை) சேனைக்குடி, எருவில், மகிளுர், போரதீவு, நாதனை முதலிய இடங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இங்கு வந்தோரில் அழகான பெண்களை இவ்வூர் ஆடவர்கள் மணந்து கொண்டதாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ‘போரேறி நகர் நாதனை ஈறாம் மரபார்கள் குறிஞ்சி வேடர் வருவதானார். எல்லை நாள் இவர் வந் காலம் கேளீர் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனிமாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை’ கி.பி. தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனிமாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை கொம்பு முறி விளையாட்டுப் பார்க்க நாதனை வேடர்கள் களுதாவளைக்கு வந்தனர். என்பது கல்வெட்டில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இற்றைக்கு (2002) ஆயிரத்தி தொண்ணூற்றெட்டு (1098) வருடங்களுக்கு முன்னர் கொம்பு விளையாட்டு மிக பிரசித்தி பெற்றிருந்தது. என்பது உறுதி செய்யப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரப் படி ஊர்ப் பெயருக்கும் ஆலயத் தோற்றத்திற்கும் இவற்றையே விளக்கமாக கூற வேண்டியுள்ளது.

திருவிழா 2014

 

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 25.06.2014 ஆரம்பமாகி 04.07.2014 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது.பத்து நாட்களும் ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் இணையத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செயய்ய்பட்டுள்ளது.

www.kaluthavalaipillaiyar.net/main
www.kaluthavalaipillaiyar.org

http://www.kaluthavalaipillaiyar.net/main/wp-content/uploads/2013/06/Pillayar-2013-223×300.jpg


Get Widget